என்னை வழி நடத்துபவர்கள்

பிரபஞ்சன்

இவர்களிடம் இருந்தே நான் வாழ்க்கையைக் கற்றேன். என் குருநாதர்கள் இவர்கள்

அண்மையில் என் பால்ய நண்பன் பெருமாளைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது. என் வீட்டைச் சுற்றி, அடித்து ஓய்ந்த பெரும் புயல் காரணமாக ஒடிந்து வீழ்ந்த, வேரோடு பெயர்ந்து வீழ்ந்த மரங்களுக்கிடையில் மிகுந்த துயரத்துடன் அமர்ந்திருந்த சமயம் அது. மரங்களின் கிளைக் கசிவுகளில் இருந்து நீரும், பச்சை மணமும் காற்றில் கலந்து நேர்ந்த அவலத்தை உணர்த்திக் கொண்டிருந்தன. போர் நிறுத்தப்பட்ட கணத்தின் கோரத்தைப் பழைய நம் தமிழ் இலக்கியங்கள் பரணியும், கம்பமும், வியாசரின் பாரதமும் வர்ணித்தவைகளைத் தெருக்களில் பார்க்க முடிந்தது. விபத்தில் சிக்கிய மனிதரைப் போலவே தெருவும், வீடுகளும் உண்மையில் துடித்தன. அந்த நேரம்தான் பெருமாள் வந்து சேர்ந்தான். என் வீட்டுக்கு அருகேதான் பெருமாளின் தோட்டம். ஓரிரண்டு பூவரசு மரங்களும் ஒரு மிகவும் முதிய அரசும், மற்றபடி தென்னைகளும் இருந்தன அவன் தோட்டத்தில். ‘வைத்தி! தோப்பே அழிஞ்சு போச்சுப்பா. தரையெல்லாம் கள்ளுக்கு விட்ட தென்னைகளிலிருந்து பெயர்ந்து வீழ்ந்த கள் பானைகளின் ஓடுகள் மூடிக் கிடக்கின்றன. எத்தனை தென்னைக் குரும்பிகள் விழுந்துவிட்டன. அரசு வேரோடு பெயர்ந்துவிட்டது. பூவரசு மரங்கள் இப்போ இல்லை. தோட்டம்தான் போச்சு என்பதில்லை. பறவைக் கூடுகள் தரையில் புரண்டு, பறவைகள் அலமந்து திரியும், மேலே வட்டமிட்டுச் சுழலும் பரிதாபம்தான் சசிக்க முடியவில்லை. பறவைகள் எங்கு போகும். கொடுமை’ என்றான். பெருமாள்  அப்படியே இருக்கிறான். மனிதர்கள் ஏதோ ஒன்றில் தம்மை நிறுவிக்கொண்டு வாழ்கிறார்கள். சுமார் அரை நூற்றாண்டுக்கு முந்தைய பெருமாள், இப்போதும் என்முன் அமர்ந்திருக்கிறான்.

அப்போதெல்லாம் நானும் அவனும்தான் சேர்ந்து சுற்றுவோம். எங்கள் ஊரின் அனைத்துத் தெருக்களும், தெருக்களின் முகமும், எங்களுக்குப் பரிச்சயம். பின்னால் படிக்க நேர்ந்த ‘வெண்ணிற இரவுகள்’ கதையின் வீடுகள் தஸ்தாவ்ஸ்கியுடன் பேசியது மாதிரி எங்களுடன் பேசின. தெருவின் இருமருங்கும் வரிசையாக நின்றன பூவரச மரங்கள் (இப்போது எங்கள் ஊரில் அந்த இனம் அருகிக் கிடக்கிறது.) மரங்கள் மட்டுமே தெருவுக்கும் வீடுகளுக்கும் அழகைத் தந்தன. நாங்கள் எங்கள் தெருக்கள் மொத்தம் நூற்றுப் பதினொன்றுக்கும் மார்க் போட்டிருக்கிறோம். எங்களுக்கு அதிகம் பிடித்ததும், முதல் மார்க் வாங்கியதும் ஆன ஒதியஞ்சாலை ஓரத்து மர நிழல்கள் எங்கள் மாலை நேரத்து சுற்றித் திரியும் இடமாக இருந்தன. மைதான வாசலில் நிற்கும் பூவரசு மரத்தின் மேடையில் அமர்ந்திருப்போம். ஐந்தரை மணிக்கு ரத்னா டாக்கீஸில் படம் தொடங்கும்முன் பாட்டு போடுவார்கள்.

பெரும்பாலும் சீர்காழியின் பாடல்கள். அப்புறம் அப்படத்தின் பாடல்கள். ‘தர்மசீலா கலைவாணருக்குள்ளே நானும் ஒருவன்’ என்ற பாடல், ராமசாமியின், ‘இன்னமும் பாராமுகம்’ முதலான பல பாடல்களை அங்கேதான் கேட்டோம். ஒருநாள் பெருமாள் வீடு கட்டும் மேஸ்திரி அப்பாவுக்குத் துணையாகத் தெருவில் போய்க்கொண்டிருக்கையில், மைதான வாசல் பூவரசு மரத்தில் காக்கிச் சட்டை அணிந்த இரண்டு பேர் ஆணி அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறான். அருகில் சென்று, ‘பச்சை மரத்துல ஆணி அடிக்கிறீர்களே?’ என்று பதறியபடிக் கேட்டிருக்கிறான். தபால் இலாகா ஊழியர், ‘வேறே, உன் தலையலையா ஆணி அடிக்க முடியும்?’ என்று கேட்டபடி சிவப்புத் தபால் பெட்டியை ஆணியில் மாட்டி இருக்கிறார். ‘உனக்கெதுக்குடா ஊர் வம்பு?’ என்ற அப்பாவுடன் நகர்ந்திருக்கிறான் பெருமாள். அன்று மாலை பெருமாளின் விரல் நகங்கள் தீருமட்டும் அவைகளைக் கடித்தபடி யோசித்துக்கொண்டே இருந்தான். கடைசியில் அந்தத் திட்டம் முடிவாயிற்று. உடனே தெருவில் கிடந்த ஒரு பிளாஸ்டிக் பையை எடுத்துக்கொண்டு, கண் டாக்டர் சத்திரத்துக் குளத்துக்குச் சென்றோம். குட்டிக்குட்டி மீன்களும், நிறைய தண்ணீர்ப் பாம்புகளும் உள்ள குளம் அது. சுலபமாகவே ஓர் இரண்டடி பாம்பு கிடைத்தது. நேரம் இருட்டிக்கொண்டு வந்தது, சௌகர்யமாக. பெருமாள் தபால் பெட்டிக்குள் பாம்பைப் போட்டான். மறுநாள், நான் பள்ளிக்கூடத்துக்கு மட்டம் போட்டேன்.

பெருமாள் வயிற்று வலி என்று சொல்லிவிட்டு என்னுடன் வந்தான். மாலை மூன்று மணிக்கே பூவரச மர மேடைக்கு வந்துவிட்டோம். மிகப் பழைய சைக்கிளில், மிகப் பழைய மனிதர், காக்கிச் சட்டையும், சைக்கிளில் மாட்டிய காக்கிப் பையுமாக, ஐந்து மணி வாக்கில் வந்து சேர்ந்தார். பிடித்துக்கொண்டு வந்த பீடியை நிதானமாக இழுத்துக் காலில் போட்டு மிதித்தார். பாக்கெட்டிலிருந்து ஒரு கொத்துச் சாவியை எடுத்து, ஒன்றைப் பிரித்து, தபால் பெட்டியண்டை வந்து பூட்டைத் திறந்து தபால்களை எடுத்தார். பிளாஸ்டிக் உறையை ஊதித் திறந்தவர் அலறிக்கொண்டு நாலு தப்படியில் தெருவுக்கு வந்து நின்றார். ‘தூத்தெறி... எந்தக் கழுதைக்குப் பிறந்த நாயோ இந்தப் பேமாளி வேலையைச் செய்தது?’ என்றபடி சுற்றும் முற்றும் பார்த்தார். நாங்கள் தெருவில் ஓடும் ரிக்ஷாக்களை வாழ்வில் முதல் முறையாகப் பார்ப்பதுபோலப் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்களைப் பார்த்தபடி,‘ஒரு நாளைக்கு என்னண்டை மாட்டத்தான் போறான். அப்போ இருக்கு நூறு செருப்படி’ என்றார். நாங்கள் மிகத் தீவிரமாக படுத்துக் கிடந்த ஒரு நாயைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மறுநாள் வேறு திட்டம் வகுத்தான் பெருமாள். எங்கள் வீட்டு அருகில்தான் ரயில்வே திடல். அங்குதான்  எங்கள் பகுதி மக்கள் காலைக் கடனுக்குச் செல்வது வழக்கம். எப்படியோ ஒரு பிளாஸ்டிக் பையில் சேர்த்துக் கொண்டு வந்து தபால் பெட்டிக்குள் நுழைத்துவிட்டான். மாலை பள்ளி விட்டதும் நான் பூவரச மேடையில் இருந்தேன். எனக்கு முன்னமே பெருமாள். சந்தேகம் வரக்கூடாது என்று பக்கத்துப் பெட்டிக்கடை ஓரம் கடலை உருண்டை வாங்கிக்கொண்டு நின்றோம். அதே சைக்கிள். அதே சார்வாள். பூட்டைத் திறப்பதில் இருந்து ஏதோ நடக்கப்போகிறது என்ற முன் ஜாக்கிரதை உணர்வோடு செயல்பட்டார் தபால்காரர். இருந்தும் என்ன? அந்தப் பை அவருடைய சினத்தைக் கிளப்பிவிட்டது. நடுத்தெருவில் நின்று போகும் வரும் மக்களைப் பார்த்து நீதி கேட்கத் தொடங்கினார் அவர். மக்கள் முகத்துக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

ஒரு நாள் கல்லும் மண்ணும். ஒரு நாள் மாட்டு சாணம். மாட்டிக் கொள்ளக்கூடாது என்ற ஜாக்கிரதை உணர்வோடு நாள் விட்டு நாள், நேரம் மாற்றி நேரம் என்று தன் பணியை விடாது ஆற்றிக் கொண்டிருந்தான் பெருமாள். ஒரு நாள் விரலை விட்டுத் துழாவிக் கடிதங்களை எடுத்துத் தரையில் போட்டான். ஒரு நாள் தபால் வண்டி வந்து, பெட்டியை எடுத்துப் போயிற்று. பெருமாள் அந்த ஆணியைப் பிடுங்கிக் கசியும் காயம் பட்ட இடத்தில் பசுஞ்சாணம் வைத்தான். மரத்தின் காயம் ஆறிற்று.

பெருமாள் பள்ளி, கல்லூரி சென்றதில்லை. சுற்றுப் புறச்சூழல் அறிவு என்கிற தனிப் புரிதல் எல்லாம் அவனுக்கு இல்லை. அவனுக்கு மரம் ஓர் உயிர்ப்பொருள். அவ்வளவே. ‘அதுக்கும் வலிக்கும். எனக்கும் வலிக்கும்’ என்பதே அவன் தர்க்கம். அவனுக்கும் அவனைப் போன்றோர்களுக்கும்தானே மழை?

எங்கள் பள்ளிக்கூடம் பற்றி உலகமே அறியும். கட்டுப்பாடு, ஒழுங்கு போன்றவைகளுக்கு ஒட்டுமொத்த உரிமை கோரும் நிறுவனம் அது. எங்கள் ஊர் சிறைச்சாலையின் மதில் சுவர் இருபது அடி என்றால், எங்கள் பள்ளியின் மதில் சுவர் முப்பதடி என்றால் அதன் உயர்வை நீங்கள் அனுமானம் செய்துகொள்ளலாம். எங்கள் சுதந்திரத்தின் எல்லை அந்த மதிலோடு நின்றது. அது சாரமில்லை. மதிலுக்கு வெளியே நடைபாதையில் ஒரு மனிதர் இருந்தார். கோதுமை நிறம். மீன் முள் போல அல்லது வெள்ளை பல் துலக்கியின் குச்சியம் போல பெரிய நீள மீசை. ஒரு கிளாஸ்கோ டின்னின் மேல் துணி கட்டி மூடி போட்டு சோன்பப்டி விற்றுக் கொண்டிருப்பார். எங்களுக்கு சோன்பப்டி என்று எல்லாம் தெரியாது. நாங்கள் மயிர் மிட்டாய் என்றுதான் சொல்வோம். அது நல்ல வார்த்தை இல்லை என்று எங்களுக்கு எப்போது அறிவுறுத்தப்பட்டதோ அப்போதிருந்தே நாங்கள் கெட்டுப் போனோம். அவர், ஒரு மாதிரிக்கு சேட்டு போல இருந்தார். நான் அவரிடம் காலை தினம் தோறும் அரையணாவுக்கு மயிர் மிட்டாய் வாங்குவேன். அளவாக கிழித்த தாளில் வைத்துத் தருவார். எனக்கு மட்டும் அதிகமாகவே தருவார். சமயங்களில் அம்மாவிடம் காசு வாங்கி வர மறந்துவிடுவேன். தாத்தாவைப் பார்க்காது மாதிரி கடந்து நடப்பேன். ‘ஏய்’ என்றழைத்து, ‘காசு இல்லையா?’ என்றபடி வழக்கம்போல மிட்டாய் தருவார். சங்கடம் என்னவென்றால் அடுத்த நாள் ஓர் அணா கேட்டால், அம்மாவிடம் காரணம் சொல்லவேண்டும். கடன் வைத்து மிட்டாய் வாங்கிச் சாப்பிட்டேன் என்றால் அந்த அளவுக்குப் பெரிய மனுஷனாயிட்டியாக்கும் என்பார். ஆனாலும், காசு கொடுக்காமல் இருந்தது இல்லை. ஒரு நாள் பள்ளி விட்டு வரும்போது தாத்தா, அப்பாவிடம் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டேன். தாத்தாவை அப்பாவுக்கும் தெரிந்திருக்கிறதே என்று ஆச்சர்யம் எனக்கு. என்னைக் கண்டதும் ‘என் மகன்’ என்றார் அப்பா. அப்பாவின் பெயரைச் சொல்லி, ‘எனக்குத் தெரியும்’ என்றார் தாத்தா. எப்படித் தெரியும். அப்பா நேரிடையாக எனக்கு எதுவும் சொல்வதில்லை. வாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கில்லை என்று அப்பா நினைத்து இருக்கக்கூடும். கொஞ்சம் கொஞ்சமாக நான் விளங்கிக் கொண்டேன்.

ஆண்டுதோறும் கோடை விடுமுறைக்கு முன் தினம் ஒரு பயங்கரமான அனுபவம் எங்களுக்குக் கிடைக்கும். அன்று, அந்த வகுப்பிலிருந்து மேல் வகுப்புக்கு தேர்வு பெற்றோமோ இல்லையா என்பதை எங்கள் தலைமை ஆசிரியர் வகுப்புதோறும் வந்து வாசிப்பார். வெற்றியை இரண்டு முறை இழந்தவன் நான். பத்து ஆண்டு படிப்பை 12 ஆண்டுகளாகப் படித்தேன். இதெல்லாம் அற்ப விஷயம் என்று வளர்ந்த பிறகு தெரிகிறது. ஆனால் அன்று குழந்தைகள் மனதில் மிகப் பெரிய காயத்தை ஏற்படுத்துவதாகவே அந்நிகழ்ச்சி இருக்கும். பிள்ளைகள் வரிசையாக வெளியே வரும்போது பெற்றோர்கள் காத்திருப்பார்கள். தேர்ச்சி பெறாத குழந்தைகளைச் சில மூடப் பெற்றோர்கள் அங்கேயே அடித்து இம்சிப்பார்கள். பலமுறை கவனித்து இருக்கிறேன். மிட்டாய்த் தாத்தா, பெற்றோர்களுடன் நின்று மாணவர்களை அடியிலிருந்து காப்பாற்றி, பெரியவர்களுக்குச் சமாதானம் பேசிக்கொண்டு இருப்பதைப் பார்த்து இருக்கிறேன்.

மிட்டாய்த் தாத்தா பிரபலமான சமையல் கலைஞராக இருந்துள்ளார். பெரிய கல்யாணம், மாநாடு போன்றவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் சமைத்து நல்ல நிலையில் வாழ்ந்திருக்கிறார். நதிகள் வற்றும் காலமும் இருக்கின்றனதானே? ஒரு கல்யாணத்தை முன்னிட்டு மனைவியும் பெண் மற்றும் ஆண் குழந்தைகளுடன் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது லாரி அடித்திருக்கிறது. கண் முன்னால் மனைவியும் குழந்தைகளும் துடித்துச் சாவதைக் கண்டிருக்கிறார். உலகம் கசந்து விட்டிருக்கிறது. தேசாந்திரம் போய்ச் சுற்றித்திரிந்து, மீண்டு வந்து இருக்கிறார். எங்கள் அப்பா கொஞ்ச காலம் என் பெயரில் (வைத்திய நாத் கபே) உணவு விடுதி நடத்தியபோது நண்பர்களாகப் பழகி இருக்கிறார்கள். மீண்டு வந்தவர், ஒற்றை அறையில் குழந்தைகளுடன், குழந்தைகளுக்கு எதையேனும் தரவேண்டும் என்கிற மனப்பான்மையுடன்தான் கடை போட்டிருக்கிறார். தனி ஆள். வியாபாரம் ஒரு பிரச்சினையே இல்லை அவருக்கு. குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருக்கவேண்டும். அதுக்கு ஒரு சாக்காகத்தான் மிட்டாய் வியாபாரம். நாங்கள் எட்டாம் வகுப்பு வருகிறபோது தாத்தா இல்லை. வாழ்க்கையை இயற்கையாகவே முடித்துக் கொண்டார். உயிர்கள் இடத்தில் அன்பு வேணும் என்று படித்ததில்லை அவர். அதனால் என்ன? அன்பு செய்யக் கற்றுக் கொடுக்கும் பள்ளிக்கூடம் இருக்கிறதா என்ன?

சுவாசிப்பதுபோல இயல்பானது அல்லவா, அன்பும் தோழமையும்.

1965க்குப் பிறகான காலகட்டம். கும்பகோணத்துக்குப் போய்க் கொண்டிருந்தோம் நானும் பிராகாஷும். வெங்கட்ராமனைச் சந்திக்கப் போகும் இலக்கியப் பயணம் அது. எம்.வி.வி.முகம், மலர்ந்த தாமரை போன்றது (தாமரை என்பதற்குக் காரணம் இருக்கிறது). வசீகரமான புன்னகை. மறுபக்கம் என்கிற உலகத் தீமை என்ற ஒன்று இருப்பதையே அறியாத ஆத்மா அவர் எனும்படி இருப்பார். தன் ஆற்றல் குறித்த எந்தச் செருக்கும் துளிகூட இல்லாத மிகப் பெரிய படைப்பாளி அவர். மதியம் தொட்டு இரவு வரை பேசினோம். வடை பாயசத்துடன் உணவுண்டோம். ‘கும்மாணம்’ டிகிரி காபி குடித்தோம். எனக்குக் கையெழுத்திட்டு அவர் புத்தகங்களைத் தந்தார். பேருந்து வரை வந்து விடை கொடுத்து அனுப்பினார்.

பேருந்து நகர்ந்தபோது பிரகாஷ் சொன்னார்:

‘மிகப் பெரிய பிரச்சினையில் இருக்கிறார் எம்.வி.வி.’

‘என்ன பிரச்சினை?’

‘தங்க சரிகை வியாபாரத்தில் மிகப் பெரிய நட்டம். ஏமாந்தாரா, ஏமாற்றப்பட்டாரா தெரியாது. ஆனால் எழுவதற்குப் பல காலம் பிடிக்கும்.’

‘ஐயோ. அந்தக் கஷ்டம் கொஞ்சம் கூடத் தெரியவில்லையே... சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாரே...’

‘ப்ச்... அதுதான் எம்.வி.வி...’

மிகவும் நொடிந்த நிலையில் அவரைப் பலமுறை நான் சந்தித்து இருக்கிறேன். வாழ்க்கைத் துன்பத்தின் சுவடு, ஒரு புல் நுனி அளவுக்கும் அவர் முகத்தில் தெரிந்தது இல்லை. அவர் உள்முகமாகத் திரும்பிக் கொண்டிருந்தார்.

என் வாழ்க்கையை வழி நடத்துகிறவர்களாக இம்மூவரையே பாவிக்கிறேன். இவர்களிடம் இருந்தே நான் வாழ்க்கையைக் கற்றேன். என் குருநாதர்கள் இவர்கள். மரம் காயப்படும், வலிக்கும் என்பவனும், குழந்தைகளின் முகம் பார்த்தலே வாழ்வின் அர்த்தம் எனக் கொண்ட மிட்டாய்த் தாத்தாவும், மலையே கழன்று வரினும், பனிபோல் அதை எதிர்கொள்ளும் ஆத்ம தைரியர் எம்.வி.வி.யும் என்னிடம் தொடர்ந்து உரையாடிக்கொண்டே இருக்கிறார்கள். நான் எழுதுகிறேன். எழுதுவேன்.

 
- (நன்றி புதிய தலைமுறை)